Mesham - Guru peyarchi 2013 - மேஷம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Mesham
மேஷ ராசிக்கு 2-ல் இருந்த குரு இப்போது 3-ஆம் இடத்துக்கு மாறுகிறார். குரு 5-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தடை விலகி, திருமணம் கூடிவிடும். குரு 7-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 9-ஆம் இடம் தகப்பனார், அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாகத் திகழும். தகப்பனார் வகை பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். 9-ஆம் இடத்துக்கு குரு 9, 12-க்குடையவர் என்பதால் சில சொத்துகளை விக்கிரயம் செய்து வேறு புதிய இடம் வாங்கலாம். யோகா, தியானப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட கால தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். புண்ணிய தலங்களுக்குப் போய்வர சுபச்செலவு உண்டாகும். வீட்டிலும் குடும்பத்திலும் சுபமங்களச் செலவுகள் உண்டாகும். சொந்தக்காரர்கள்- சுற்றத்தார்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை: 
மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு 3-ல் அஸ்தமனம் என்பதால் தகப்பனார் வகை உறவு முறையில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். அதேபோல நண்பர்களுக்கு உதவி செய்து வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை :
குரு வக்ரத்தில் நற்பலன்கள் நடக்கும். சகோதர அனுகூலம், நண்பர்கள் நல்லுதவி, உடன்பிறப்புக்களின் ஒத்துழைப்பு, மனதில் நம்பிக்கை, தைரியம், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். திருமணமாகும் பருவத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் நிறைவேறும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இணைந்து வாழலாம். ஆன்மிகத்தில் ஆனந்தமடையலாம். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். கருதிய காரியங்களில் லாபம் பெருகும். வில்லங்கம், விவகாரங்களில் வெற்றியுண்டாகும்.

Rishabam - Guru peyarchi 2013 - ரிசபம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Rishabam
குரு இப்போது 2-ஆம் இடமான மிதுன ராசிக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் அடையப்போகிறீர்கள். அவர் 2-ஆம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்து பலன் தரவிருப்பதால், வாக்கு, நாணயம் காப்பாற்றப்படும். தாராளமான பணப்புழக்கம் இருக்கும். அதனால் பணக் கஷ்டமும் பணநெருக்கடியும் விலகும். எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். திடீர் தனப்ராப்தி அல்லது புதையல் யோகம் உண்டாகும். லாட்டரி பரிசு யோகம் உண்டாகும். போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும், ஏற்றத்துக் காகவும் அஸ்திவாரமாகிவிடும். கடன்கள், சுபக்கடன்களாகிவிடும். விரயமும் செலவும் மங்களச் செலவுகளாக மாறும். திருமணம், கிரகப்பிரவேசம், மகப்பேறு, புத்திர பாக்கியம், பூமி, வீடு, வாகன சுகபோகத்துக்காக கடன் வாங்கும் சூழ்நிலையாகும். ஆபத்துகளும் விபத்துகளும் வைத்திய சிகிச்சை போன்றவையும் வந்தாலும் உயிர்ச்சேதம் வராது. உங்களுடைய முயற்சியில் வெற்றியும் செய்தொழில் வகையில் லாபமும் உண்டாகும். சேமிப்பும் உண்டாகும். 

1-6-2013 முதல் 1-7-2013 
குருவின் அஸ்தமனம் என்பதால், செயல்களிலும் காரியங்களிலும் முயற்சிகளிலும் தடை, தாமதம், குறுக்கீடு முதலிய பலன்களைச் சந்திக்கக் கூடும். சஞ்சலம், கவலை, ஏமாற்றம், நம்பிக்கைத் துரோகம் முதலிய பலன்களையும் சந்திக்க நேரலாம். 

24-10-2013 முதல் 20-2-2014 
குரு வக்ரம் என்பதால், அற்புத பலன்களாக நடக்கும். எதிர்பாராத லாபம், வெற்றி, சேமிப்பு, குடும்பத்தில் மங்களகாரியம், தனவரவு ஆகிய பலன்கள் நடக்கும்.

Midhunam - Guru peyarchi 2013 - மிதுனம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Midhunam
மிதுன ராசிக்கு 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசிக்கு மாறு்கிறார். குரு கேந்திராதிபத்தியம் பெற்று- கேந்திராதிபத்திய தோஷம் அடைந்து ஜென்ம ராசியில் நிற்பது நல்லதல்ல. ஒவ்வொரு காரியத்தையும் செயல்படுத்தும்போது குறுக்கீடுகளும் இடையூறுகளும் தடைகளும் அதிகமாக இருக்கும். போட்டியும் பொறாமைகளும் கண்திருஷ்டிகளும் அதிகமாகவே காணப்படும். புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம், அவர்களின் எதிர்கால இன்ப வாழ்வுக்குத் தேவையான வசதிகளைச் செய்துக் கொடுப்பீர்கள். திருமணத் தடைகள் விலகி, திருமணம் கைகூடும். கணவருக்கு மனைவியாலும் மனைவிக்கு கணவராலும் யோகம் உண்டாகும். மனைவிபெயரில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். இழந்து விட்ட பூர்வீகச்சொத்துகள் கிடைக்கும். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
குரு அஸ்தமன காலத்தில் எந்த நன்மைகளும் நடக்காது. கௌரவப் பிரச்சினைகள் எழலாம். திருமணத் தடை, திருமண தாமதம், திருமண வாழ்க்கையில் குழப்பம், திருப்பம், நிம்மதிக் குறைவு, சஞ்சலம் ஆகிய பலனும்; தொழில் வகையிலும் தொய்வுகள், துயரங்கள், துன்பங்களும் உண்டாகும். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
பொதுவாக குரு வக்ரத்தில் கஷ்டப்படுத்தமாட்டார். திருமணம், மணவாழ்க்கை, தொழில், வேலை, உத்தியோகம் ஆகிய வற்றில் நல்ல திருப்பத்தையும் யோகத்தையும் எதிர்பார்க்கலாம்.

Kadagam - Guru peyarchi 2013 - கடகம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Kadagam
கடக ராசிக்கு 11-ல் இருந்த குரு இப்போது 12-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 9-க்குடையவர் 12-ல் மறைவதால் பிதுரார்ஜித சொத்துகள் விரயமாகலாம். தகப்பனார் வகையில்- உடன்பிறந்தோர் வகையில் இழப்புகள், விரயங்கள் ஏற்படலாம். எதிரி, போட்டி, கடன், விவகாரம் எல்லாம் வந்தாலும், முடிவில் ஜாதகருக்கு அனுகூலமாகிவிடும். 6-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் ஏற்படும்; வைத்தியச் செலவு வரும்; போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் உருவாகும். அதனால் ஏற்படும் கவலைகளும் சஞ்சலங்களும் உங்களை டென்ஷன் ஆக்கலாம். 

விரய ஸ்தானத்தில் நின்று 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதற்காக வெளியில் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். சிலர் மேற்படிப்பு படிக்கலாம். சுகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியம் தெளிவடையும். தாய்க்கு பிணி, பீடை நிவர்த்தியாகும். தாயாதி வகையில் நிலவிய பகை வருத்தம் விலகி, உடன்பாடும் ஒற்றுமையும் உண்டாகும். புதிய வாகனம் வாங்கலாம். 7-க்குடையவர் கடக ராசிக்கு 4-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் பார்ப்பதால், தொழில், வேலை, உத்தியோகம் சம்பந்தமான முன் னேற்றங்களும் நன்மைகளும் உண்டாகும். 10-க்கு 12-க்குடைய குரு ராசிக்கு 12-ல் நின்று 10-க்கு 10-க்குடைய சனியைப் பார்ப்பதால், வெளிநாட்டு வேலை, உத்தியோகம் உண்டாகும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் உண்டாகும். தாயார், பூமி, வீடு, மனை, சுகம், கல்வி, வாகனம் சம்பந்தமான நன்மைகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகள் வகையிலும் மனைவி வகையிலும் எதிர்பாராத செலவுகள் வந்துசேரும். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
குருவின் அஸ்தமனம் இந்த ராசியைப் பொறுத்தவரை நல்லதே செய்யும். எதிரி, கடன், வைத்தியச்செலவு, போட்டி, பொறாமை ஆகிய கெடுபலன்கள் எல்லாம் அஸ்தமனம் ஆகிவிடும். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
குரு வக்ரமாக இருக்கும் இக்காலம் நல்லதும் நடக்கும்; ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கெட்டதும் நடக்கும்.

Simmam - Guru peyarchi 2013 - சிம்மம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Simmam
10-ல் இருந்த குரு இப்போது 11-ஆம் இடமான மிதுனத்திற்கு வருகிறார். குருப்பெயர்ச்சியினால் ராஜயோகத்தையும் செல்வாக்கையும் அடையப் போகிறீர்கள். எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான். சகோதர வகையில் நன்மையும் அனுகூலமும் அடையலாம். நீண்டகாலமாக தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு யோகம் போன்ற காரியங்கள் யாவும் இனிமேல் கைகூடும். மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் திருப்தியாக நிறைவேற்ற முடியும். மனைவியால் யோகமும் வருமானமும் வரும். மனைவிக்கு முழு ஆரோக்கியம் உண்டாகும். 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், பூர்வ புண்ணிய பாக்கியம் நன்மையளிக்கும், எதிர்பாராத லாபங்களும் நன்மைகளும் அதிர்ஷ்டங்களும் வந்துசேரும். குருவருளும் திருவருளும் பரிபூரண மாகக் கிடைக்கும். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
குருவின் அஸ்தமனம் சில சலனங்களையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்தலாம். நூலிழையில் வெற்றி வாய்ப்புகள் கை தவறிப் போகலாம். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
இக்காலம் 11-ஆம் இடத்து குரு எல்லா வகையிலும் உங்களுக்கு வெற்றியையும் லாபத்தையும் மேன்மையையும் தருவார்.

Kanni - Guru peyarchi 2013 - கன்னி : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Kanni
9-ல் இருந்த குரு இப்போது 10-ல் மிதுனத்துக்கு மாறியிருக்கிறார். குரு பார்வையால் உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் மேன்மையடையும். தனவரவுக்கும் பஞ்சம் இருக்காது. சரளமான பணப்புழக்கம் காணப்படும். பிரிவைச் சந்தித்த கணவன்- மனைவி இனி ஒன்றுசேரும் யோகம் உண்டாகும். வேலை காரணமாக வெளிநாடு போனவர்கள், இனி சிறுமாற்றத்தைச் சந்திக்கக் கூடும். மாணவர்கள் இனி மேல்படிப்பைத் தொடரலாம். சொந்த வீடு அல்லது பிளாட் அமையும் யோகமுண்டு. சிலருக்கு வாகன யோகம் அமையும். குரு 10-ல் நிற்பதால் தொழில் வகைக்காக கடன் வாங்க நேரும். குரு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகன வகைக்காகவும் கடன் வாங்கலாம். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
குரு அஸ்தமன காலம். ஆரோக்கியம் பாதிக்கும். குடியிருப்பில் பிரச்சினை ஏற்படும். அண்டை அயலாருடன் வாக்கு வாதம், வம்புச்சண்டை உருவாகலாம். வேலையில் இருப்போருக்கு டென்ஷன் ஏற்படும். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
கன்னி ராசிக்கு 10-ல் உள்ள குரு வக்ரம்பெறும் இக்காலம் தொழில், வேலை, உத்தியோகம், குடும்பம், வாழ்க்கை இவற்றில் திருப்திகரமான பலன்கள் நடைபெறும்.

Thulam - Guru peyarchi 2013 - துலாம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Thulam
8-ஆம் இடத்தில் இருந்த குரு இப்போது 9-ஆம் இடத்துக்கு மாறுகிறார். குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் ராஜ யோகத்தையும் அடையப்போகிறீர்கள். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால், அங்கு நிற்கும் குரு உங்களுக்கு மனோபலத்தையும்- ஆன்ம பலத்தையும் தருவார். தெய்வ நம்பிக்கையால் தெம்பு, திடம், வலிமை உண்டாகும். 9-ஆம் இடத்து குரு பலனாக குருவருளும் திருவருளும் பெருகும் என்பதால் எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றை எளிதாகச் சமாளித்துவிடலாம். ஜென்ம ராசியை பாக்கிய ஸ்தானத்தில் நின்று பார்ப்பதால், இழந்த செல்வாக்கும் பதவியும் கௌரவமும் அந்தஸ்தும் மீண்டும் தேடிவரும். மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள்மீது சுமத்தப்பட்ட வீண் பழியும் களங்கமும் மாறும். நண்பர்களின் சகாயமும் உடன்பிறந்தவர்களின் உதவியும் கிடைக்கும்.. 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
குரு அஸ்தமனமாக இருப்பதால், தகப்பனார் வகையில் அல்லது பங்காளி வகையில் பிரச்சினைகளும் விரயங்களும் உண்டாகலாம். சிலருக்கு கடன் சுமை அதிகமாக இருக்கும். போட்டி, பொறாமை, வைத்தியச் செலவுகளையும் சந்திக்க நேரும். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
இக்காலகட்டத்தில் குரு 9-ல் வக்ரம். வக்ரத்தில் உக்ர பலம். இந்தக் காலம் முழுவதும் உங்களுக்கு மிகச்சிறந்த யோகங்களும் நன்மையும் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

Viruchigam - Guru peyarchi 2013 - விருச்சிகம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Viruchigam
7-ல் இருந்த குரு இப்போது 8-ஆம் இடத்துக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலம் இல்லாத இடத்தில் வந்திருக்கிறது. குடும்பக் குழப்பம், பொருளாதாரச் சிக்கல், வரவுக்குமேல் செலவு, தேவையற்ற கடன் தொல்லை, அதனால் தொழிலைக் கவனிக்க முடியாதபடி பிரச்சினை, மக்கள் வகையிலும் பிரச்சினை, பிள்ளை களினால் தொல்லை, இருக்கும் தொழிலை சரிவர நடத்த முடியாமல் தடுமாற்றம், புதிய தொழில் சிந்தனை உருவெடுத்தும் அதை முறையாகச் செயல்படுத்த முடியாத சிக்கல் ஆகிய பலன்களைத் தரும். குரு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செலவு செய்ய வைப்பார். அதே சமயம், 2-ஆம் இடத்தைப் பார்த்த பலன் அதற்குண்டான வரவுக்கும் வழி செய்வார். குரு 4-ஆம் இடத்தைப் பார்த்த பலன் பூமி, வீடு, வாகன வகையிலும் சுபமுதலீடு செலவு உண்டாகும். அதற்காக கடன் வரவும் கிடைக்கும். சிலருக்கு தாய்வழிச் சொத்துகள் கிடைக்கும். அதை அப்படியே அனுபவிக்கலாம் அல்லது அதை விற்று பரிவர்த்தனை செய்து வேறு சொத்து வாங்கலாம். சிலர் தனக்கு ஏற்கெனவே இருக்கும் பழைய சொத்து அல்லது வாகனத்தை விற்று புதிய சொத்து அல்லது புதிய வாகனம் வாங்கலாம். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
இந்த அஸ்தமன காலத்தில் எல்லாக் காரியங்களிலும் மந்த நிலையும் ஞாபகமறதியும் முயற்சிகளில் தோல்வியும் ஏமாற்றமும் காணப்படும். தவிர்க்க முடியாத விரயச் செலவுகளும் உண்டாகலாம். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
அஸ்தமன காலத்தில் ஏற்பட்ட நஷ்டங்களையும் ஏமாற்றங் களையும் இக்காலம் ஈடுகட்டி விடும். வரவேண்டிய பணம் வசூலாகும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் வகையில் சுபச்செலவுகளும் நடக்கும்.

Dhanusu - Guru peyarchi 2013 - தனுசு : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Dhanusu
6-ல் இருந்த குரு இப்போது 7-ஆம் இடத்துக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் ராஜயோகத்தையும் நன்மைகளையும் அடையப் போகிறீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இனி உடனடியாக கல்யாணம் கைகூடி வரும். நிலையான தொழிலோ நிரந்தர வருமானமோ இல்லாமல் அல்லல்பட்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நிலையான தொழிலுக்கு வழிவகுக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தையே இல்லாதவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வாரிசைக் கொடுக்கும். தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத லாபம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரமோஷன், ஊதிய உயர்வு கிடைக்கும். சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் இருந்த சச்சரவுகளும் பிரச்சினை களும் விலகும். பங்காளிப் பகை விவகாரம் தீரும். அந்நியர்களின் விரோதமும் மாறும். எதிர்காலத்தின்மேல் பிடிப்பும் நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டு உற்சாகமாகச் செயல்படுவீர்கள். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
தனுசு ராசி அதிபதி குரு. ராசிநாதன் குரு அஸ்தமனமடைவது ஆகாது. உங்கள் காரியங்கள், முயற்சிகள் அனைத்திலும் தடை, தாமதம், குறுக்கீடு உண்டாகும். பூமி, வீடு, வாகனத்துக்கும் குரு அதிபதியாவார். எனவே சிலருக்கு இடப் பிரச்சினை, வாகன வகையில் செலவு, ஆரோக்கியக் குறைவு ஆகிய பலன்களை சந்திக்க நேரும். சிலர் வீடு மாறலாம் அல்லது இடப்பெயர்ச்சி வரலாம். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
குரு வக்ரமாக இருக்கும் இக்காலகட்டத்தில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு சொந்தவீடு அமையும். இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போருக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் அமையும். ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில், கொடுக்கல்- வாங்கல், சீட்டு கம்பெனி நடத்துகிறவர்களுக்கு இக்காலம் அற்புதகாலம். லாபமும் யோகமும் உண்டாகும்

Makaram - Guru peyarchi 2013 - மகரம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Makaram
5-ல் இருந்த குரு இப்போது 6-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 6-ஆம் இடம் என்பது கடன், வியாதி, வைத்தியச் செலவு, எதிரி, போட்டி, பொறாமை ஆகியவற்றைக் குறிக்கும். இதில் குரு நிற்பதால் இவற்றை அதிகமாக்குவார். கடந்த காலத்தில் வேலை தேடி செய்த தீவிர முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்கும். அப்போது ஆரம்பித்த வியாபாரம் இப்போது லாபகரமாக சூடு பிடிக்கலாம். அன்று தச்சு செய்த கட்டடம் இன்று பூர்த்தியடையலாம்; தொழில் முயற்சி, வேலை வாய்ப்பு, கட்டட காரியங்களுக்காக குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம். குரு 2-ஆம் இடமான தன ஸ்தானத்தைப் பார்ப்பதால், தனவிருத்தியும் சம்பாத்தியமும் குறையாமல் இருக்கும். இந்த 6-ஆமிடத்து குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் தன் சொந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவது உறுதி. 

12-ஆம் இடத்தை 12-க்குடைய குருவே பார்ப்பதால் விரயங்கள், செலவுகள் வந்தாலும் அவை பயனுள்ள செலவாகவும் நன்மையான விரயங்களாகவும் இருக்கும். வியாபாரிகள் தொழில் துறையில் புதிய முதலீடுகளைச் செய்து தொழிலைப் பெருக்கலாம். வியாபாரம் கூடுதலாக இருந்தாலும், சனியும் ராகுவும் 12-ஐப் பார்ப்பதால் சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். 4-ஆம் இடத்தை சனியும் ராகுவும் பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான செலவுகளும் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு 10-ல் சனி, ராகு நிற்பதால் பதவி உயர்வும் விரும்பிய இடப்பெயர்ச்சியும் தாமதமாகும். வேலைப் பளு அதிகமாகும். அதற்கான பாராட்டும் பதவி உயர்வும் தாமதமாகும். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
மகர ராசிக்கு குரு 3, 12-க்குடையவர். அவர் 6-ல் அஸ்தமனமடைவது நல்லது. எதிரி, கடன், விவகாரம் எல்லாம் மாறி உங்களுக்கு அனுகூலமாக அமையும். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
குரு 6-ஆமிடத்தில் வக்ரமடைவதால், 6-ஆம் இடத்திற்குரிய பலன்கள் அதிகம் செயல்படும். ரோகம், ருணம், சத்ரு- அதாவது வியாதி, கடன், எதிரி போன்றவை வலுவாக இருக்கும். அதனால் சில தொல்லைகளை சந்திக்க நேரும்.

Kumbam - Guru peyarchi 2013 - கும்பம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Kumbam
4-ல் இருந்த குரு இப்போது 5-ஆம் இடத்துக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அடையப் போகிறீர்கள். மக்கள் பேறு, மகிழ்ச்சி, உண்மையான வேலையாட்கள் அமைதல், சகலவித சம்பத்து, செல்வம், பாக்கியம் உண்டாகுதல், குலதெய்வ வழிபாடு, தாய்மாமன் உதவி, பாட்டனார் பிதுரார்ஜித சொத்துகள் கிடைத்தல், நீண்டகால திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறுதல் ஆகிய நற்பலன்கள் உண்டாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம், சடங்கு, மக்கட்பேறு போன்ற பாக்கியம் உண்டாகும். படித்த பிள்ளைகளுக்கு தகுதிக் கேற்றபடி தரமான வேலைவாய்ப்பு, முன்னேற்றம், வாழ்க்கைத் தர மேன்மை உண்டாகும். 

எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபமங்கள நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, மகிழ்ச்சி நிலவும். படிப்பில் இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி அக்கறையாகப் படித்து, பாஸ் செய்துவிடுவீர்கள். தந்தைவழி ஆஸ்திகள் கிடைக்கும். 11-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் லாபம், வெற்றி, அனுகூலம் உண்டாகும். மூத்த சகோதரவழி சகாயமும் நன்மையும் ஏற்படும். ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் இழந்த பதவி, வேலை மீண்டும் கிடைக்கும். செல்வாக்கு பெருகும். 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஒரு சிலருக்கு ஆன்மிகப் பணியில் ஈடுபாடு உண்டாகும். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
இந்த குரு அஸ்தமன காலம் உங்களுக்கு வேதனையும் சோதனையும் நிரம்பியதாக இருக்கும். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
குருவின் வக்ர கதியில் எல்லாம் நல்லதாகவே நடக்கும். உங்கள் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். நீண்ட நாள் முயற்சிகள் கைகூடும். வரவேண்டிய பணங்கள் வந்து சேரும். லாபங்கள் பெருகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மக்களால் அனுகூலம் ஏற்படும்.

Meenam - Guru peyarchi 2013 - மீனம் : குரு பெயர்ச்சி பலன்கள்

Guru peyarchi 2013 for Meenam
3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடத்துக்கு மாறுகிறார். குரு உங்கள் ராசிநாதன் என்ற பெருமையால் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களைக் கெடுக்கமாட்டார். மேற் படிப்பு யோகம், பாடத்தில் அரியர்ஸ் இருந்தால் அவற்றை எழுதி பாஸ் செய்வது, வெளிநாடு போய் படிக்கும் யோகம், பிளாட் வாங்குவது, கட்டடம் கட்டுவது, புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வது போன்ற பலன்கள் உண்டாகும். 

முழு அளவில் ஆரோக்கியம் ஏற்படும். உங்களுக்கோ குடும்பத்தினருக்கோ இனி சுகம் உண்டாகும். அதேபோல தாயாருக்கு முழங்கால் வலி, மூட்டுவலி, கழுத்து வலி அல்லது நரம்புத் தளர்ச்சியால் அவதிப்பட்ட நிலை மாறிவிடும். சிலருக்கு டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் துறையில் போட்டி, பொறாமைகள் குறுக்கிட்டாலும், கூட இருந்தே குழிபறிக்கும் நம்பிக்கை துரோகிகள் இருந்தாலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது; 8, 12-ஆம் இடங்களை குரு பார்ப்பதால், குடும்பத்தில் அர்த்த மில்லாத பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். மற்றவர்கள் உங்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யலாம். சிலருக்கு ஊர்மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை 
ராசிநாதனும் 10-க்குடையவருமான குரு 4-ல் அஸ்தமனம் என்பதால் கௌரவப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். தொழில் துறையிலும் அல்லது உத்தியோகத்திலும் போட்டி, பொறாமை, பிரச்சினைகள், எதிர்ப்பு, இடையூறுகளை சந்திக்க நேரும். சிலருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சிலருக்கு குடியிருப்பு மாற்றங்களும் வரும். வாகனம் சம்பந்தமான பராமரிப்பு செலவுகளும் ஏற்படலாம். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை 
வக்ரத்தில் உக்ரபலம் என்பதால், இக்காலம் முழுவதும் உங்களுக்கு யோகமான காலம்; நன்மையான காலம். பட்டம், பதவி, பாராட்டு கிடைக்கும். தொழில் உயர்வு, சம்பாத்திய மேன்மை உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் நிறைவு, நிம்மதி ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் உண்டாகும். வாகன யோகம் அமையும். புதிய வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம். மாணவர்களுக்கு மேற்படிப்பு யோகம் உண்டாகும்.

Comments

Popular Posts