செய்தி

மே.வங்கத்தில் சப்தமில்லாமல் பால் விலை, மின் கட்டணம் உயர்வு: மம்தா இரட்டை வேடம்
கோல்கட்டா: ரயில் கட்டணம், பெட்ரோலியப் பொருட்கள் விலை ஆகியவற்றை உயர்த்தியதற்காக, மத்திய அரசை கடுமையாக விமர்சித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன் ஆட்சி நடக்கும் மாநிலத்தில், மின்சாரம், பால் ஆகியவற்றின் கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளார். இந்த விஷயத்தில், மம்தா, இரட்டை வேடம் போடுவதாக இடதுசாரி கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கடந்த சில மாதங்களாக, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஐக்கிய முற்போக்கு
கூட்டணியில், இவரது கட்சி அங்கம் வகித்தாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை, அவ்வப்போது உயர்த்தப்படுவதற்கு, தன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இவரது கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி, ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இதை சமாளிக்கும் வகையில், சிறிய அளவில் கட்டண உயர்வை அறிவித்தார். இதற்கு, மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த கட்டண உயர்வு, சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும், இது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார். தன்னை கலந்தாலோசிக்காமல், கட்டண உயர்வை அறிவித்ததால், தினேஷ் திரிவேதியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, போர்க்கொடி தூக்கினார். ஆட்சி தொடர்வதற்கு, மம்தாவின் ஆதரவு தேவைப்பட்டதால், தினேஷ் திரிவேதியை நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக, திரிணமுல் கட்சியைச் சேர்ந்த முகுல் ராயை, ரயில்வே அமைச்சராக பிரதமர் நியமித்தார். ரயில் கட்டண உயர்வும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு: சாதாரண மக்களின் நலனுக்காக, தான் போராட்டம் நடத்துவதாகக் கூறும் மம்தா, தான் ஆட்சி செய்யும், மேற்கு வங்க மாநிலத்தில், மின்சாரம், பால் ஆகியவற்றின் கட்டணங்களை கணிசமாக உயர்த்தியுள்ளார். கடந்த 10 மாதங்களில் மட்டும், மூன்று முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். ஒட்டு மொத்தமாக, 29 சதவீதம் அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பால் கட்டணமும், லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில், மேலும் நான்கு ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோல்கட்டாவில் டிராம் போக்குவரத்து கட்டணத்தையும், ஒரு ரூபாய்க்கும் சற்றும் அதிகமாக உயர்த்தும் திட்டத்தை, மாநில அரசு செயல்படுத்த உள்ளது.

இரட்டை வேடம்: இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் முகமது சலீம் கூறுகையில், ""மத்திய அரசைப் போலவே, மம்தாவும், மேற்கு வங்கத்தில் கட்டணங்களை உயர்த்தி வருகிறார். ஆனாலும், மத்திய அரசு விலையை உயர்த்தும் போதெல்லாம், கடுமையாக விமர்சித்து, தன்னை சாதாரண மக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். இந்த விஷயத்தில் மம்தா, இரட்டை வேடம் போடுகிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.

Comments

Popular Posts